உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில வாரங்களாகவே கரோனாவின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டுவந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் இந்திய அளவில் 14ஆவது இடத்தில் உள்ள ஹரியானாவில் தீபாவளி பண்டிகையை அடுத்து அலை பாதிப்பு தீவிரமடையலாம் என அச்சம் எழுந்துள்ளது.
கடந்த ஒரேநாளில், இரண்டாயிரத்து 135 பேர் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதிகபட்சமாக குருகிராம் மாவட்டத்தில் 698 பேரும், குறைந்தபட்சமாக ரோஹ்தக் மாவட்டத்தில் 104 பேரும் புதிதாகத் தொற்று பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக, நேற்று (நவ. 27) ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்திருப்பது அந்த பயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிகரித்துவரும் கரோனா நோய்த் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடு விதிகளை அமல்படுத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த 25ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் பள்ளிகள், கல்லூரிகளை மூட ஹரியானா அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக இன்று (நவ. 28) அம்பாலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள் துறை அமைச்சர் அனில் விஜ், “அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்புகள், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் டிசம்பர் 10ஆம் தேதிவரை ஹரியானா அரசு முடிவுசெய்துள்ளது.
மாநில முழுவதுமுள்ள சுகாதாரத் துறை அலுவலர்களின் தலைமையிலான குழுக்கள் மூலமாக அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படும். மாநிலப் பள்ளி கல்வி இயக்குநரகம் மூலமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
ஹரியானாவில், இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 746 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இரண்டு லட்சத்து ஆறாயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 20 ஆயிரத்து 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இரண்டாயிரத்து 345 பேர் இதுவரை இத்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ’கடன் வட்டித் தள்ளுபடியை முறையாக அமல்படுத்துங்கள்’ - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்