மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேசிய குடும்ப நலன் மற்றும் சுகாதார கணக்கெடுப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று வெளியிட்டார்.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "90 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் தொகை சுகாதார கணக்கெடுப்பு திட்டங்களை ஒப்பிடுகையில் 5ஆவது தேசிய குடும்ப நலன் மற்றும் சுகாதார கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மற்ற நாட்டு சுகாதாரத் திட்டங்களுடன் ஒப்பீடு செய்வதற்கு இது பயன்படும். 6.1 லட்சம் வீடுகளில் இந்தக் கணக்கெடுப்பானது எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை, சுதாதாரம், குடும்ப கட்டுப்பாடு, ஊட்டச்சத்து உள்ளிட்ட விவரங்கள் குறித்து வீடுகளுக்கே சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்ஸாம், பிகார், மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களின் விவரங்கள் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த கணக்கெடுக்கும் பணி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அடுத்தாண்டு மே மாதம், இப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015-16 காலகட்டங்களில் தாய் சேய் பாதுகாப்பில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டது. அது குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கருவுறுதல் வீதம் குறைந்த நிலையில் கருத்தடை பயன்பாடு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 முதல் 23 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது பெரிய அளவில் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.