கர்நாடகா மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் உள்ள உஜிரே பகுதியில் தொழிலதிபர் பிஜோய் என்பவரின் 8 வயது மகன் அனுபவ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று டிசம்பர் 17 ஆம் தேதி காரில் கடத்திச் சென்றுள்ளது.
பிறகு அந்தச் சிறுவனின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.17 கோடி கொடுத்தால்தான் சிறுவனைவிட முடியும் என மிரட்டியுள்ளனர். பணத்தை பிட்காயின் மூலம் செலுத்துமாறு கூறியுள்ளனர். இது குறித்து சிறுவனின் தாத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?
இது குறித்து காவல் கண்கானிப்பாளர் கார்த்திக் ரெட்டியின் தலைமையில் மங்களூரு காவல் துறை சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கடத்தல்காரர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா அருகே உள்ள கர்னோஹோசள்ளி கிராமத்தில் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டார். அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுநாத் என்பவரது வீட்டிலிருந்து சிறுவனை காவல் துறை மீட்டனர்.
சிறுவனை கடத்தியவர்கள் எதற்காக பிட்காயின் மூலம் பணம் செலுத்தக் கேட்டனர் என்று காவல் துறையினர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.