உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி மாவட்டத்தை அடுத்துள்ள ஒரு சந்தையில் ஏழை தொழிலாளர்கள் நாள்தோறும் தங்களைத் தாங்களே மனிதச் சந்தையில் ஏலம் விட்டு, பணி செய்து அதன் மூலம் வரும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத கட்டாய சூழலில், மனிதர்கள் தங்களை கூலி வேலைக்கு விற்பனை செய்துகொள்ளும் இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூலி தொழிலாளர்கள் கூடுகின்றனர். தங்கள் முறை வரும் வரை காத்திருந்து, பின்னர் ஏலம் எடுக்கப்பட்டு அந்த பணியை செய்து அன்றாட வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும், இந்த சந்தை மனித வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெரும்பாலும் தினசரி கூலிகளாக வேலைக்கு எடுக்கப்படும் தொழிலாளர்கள், அவரவருக்கு ஏற்ற நிர்ணயிக்கப்பட்ட பேரத்தில் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.
அதிகரித்துவரும் வேலையின்மை, உணவு மற்றும் தேவைகளை ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயத்தால், பணியாளர்கள் குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கும் கொடுமைகளும் நிகழ்கிறது.
ஏலத்திற்குப் பிறகு, தொழிலாளியை வாங்கிய முதலாளி பணிக்கு அழைத்துச் செல்வார். அன்றைய தனது வேலையை முடித்துவிட்டு, வீடு திரும்பும் கூலி தொழிலாளி மறுநாள் மீண்டும் ஏலச் சந்தைக்கு திரும்புவார்.
இதுதொடர்பாக அரசாங்க அலுவலர்கள் கூறுகையில், "விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலிகளை வேலைக்கு அமர்த்த புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் 100 நாள்கள் உத்தரவாத வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது" என கூறுகின்றனர்.
ஊழலின் மத்தியில் இத்தகைய திட்டங்களிலிருந்து எந்த நன்மையும் பெறமுடியாத தொழிலாளர்களின் வாழ்க்கை, வறுமை மற்றும் துயரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.