குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்திலுள்ள கட்டோடரா பகுதியில் 50 வயதான நபர் ஒருவர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து அவரை அப்பகுதியிலுள்ள அரசு பொதுமருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமானார்.
இதையடுத்து காவலர்கள் அவரை வலைவீசி தேடிவந்தனர். மருத்துவமனையிலுள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் அவர் நேற்று (ஏப்30) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் விதி சவுதாரி கூறுகையில், “கோவிட்-19 பெருந்தொற்று நோயாளி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம்.
அந்த நபர் கடந்த 28ஆம் தேதி இரவு கோவிட் வார்டிலிருந்து 'ரகசியமாக' நடந்து சென்று மாயமாகியுள்ளார். சாத்தியமான ஒவ்வொரு இடத்திலும் காவல்துறையினர் அவரைத் தேடினர். இருந்தபோதிலும், அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்போதைக்கு, அவர் சிகிச்சையின் நடுவில் ஏன் ஓடிவிட்டார், அவர் எங்கு சென்றார், எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இது குறித்து நாங்கள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
குஜராத்தில் நான்காயிரத்து 82 பேர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 197 ஆக உள்ளது.