கல்யாண வீட்டில் சின்ன சின்ன ரகளை நடப்பது வழமைதான் என்றாலும் அது கைகலப்பில் முடியுமேதவிர கொலையில் அல்ல. ஆனால் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத்தில் மணமகனே தன் மைத்துனனை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பந்தியில் உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட பிரச்னை திருமண வீட்டை துக்க வீடாகமாற்றியுள்ளது. இது குறித்து மணமகளின் தந்தை ராம்பால் ஜாதவ் காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மூத்த சகோதரன் புனித் கூறுகையில், “திங்கள்கிழமை இரவு மணமகன் மனோஜ்குமார் அவருடைய நண்பர்களுடன் வந்தார். அப்போது நாங்கள் அவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் மற்றும் தண்ணீர் கொடுத்தோம். இந்த பரிமாறுதலில் மணமகன் மனோஜ் குமார், அவரது நண்பர்கள் முழுமையாக திருப்தி ஆகவில்லை என தெரிவித்தனர். உடனே எங்கள் வீட்டு பெரியவர்கள் அவர்களைச் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் மணமகனின் நண்பர்கள் மனோஜை தூண்டிவிட அவர் ஒரு நாட்டு துப்பாக்கியால் என் தாய்மாமா ராம்குமாரை நோக்கி சுட்டார்.
அவர்களுக்கு தண்ணீர் பரிமாறிக் கொண்டிருந்த எனது தம்பி பிரன்ஷுவை ஒரு காரில் அழைத்துச்சென்றனர். அவர்கள் காரில் தப்பி ஓடும்போது 3 பெண்கள் மீது கார் மோதியதில் அவர்களும் படுகாயமடைந்தனர். பிரன்ஷுவுடன் திரும்ப வருமாறு மனோஜிக்கு பலமுறை செல்போனில் அழைத்தபோதும் அவர் வர மறுத்துவிட்டார்.
அதிகாலை 3 மணியளவில், அவர் எனது சகோதரரின் உடலை கிராமத்தில் போட்டுவிட்டு மீண்டும் தப்பி ஓடிவிட்டார். பிரன்ஷு கழுத்தில் நெறிக்கப்பட்ட வடு இருந்தது, முகங்கள் சிதைக்கப்பட்டிருந்தன” என தெரிவித்தார்.
கார் மோதியதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மணமகன் மனோஜ், அவரது நண்பர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'திருட எதுவுமில்லை' - மீன் குழம்பை சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் மட்டையான திருடன்!