இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்குமிடையே தற்போது அசாதாரண சூழல் நிலவிவருகிறது. இரு நாட்டின் எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் வீரமரணமடைந்தனர்.
மரணமடைந்த 20 ராணுவத்தினர் குறித்த விவரங்களை நேற்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. இதில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களே அதிகபட்சமாக மரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அம்மாநிலத்தின் பாட்னாவைச் சேர்ந்த சுனில் குமார், சமஸ்திபூரைச் சேர்ந்த அமன் குமார் சிங், வைஷாலியைச் சேர்ந்த ஜெய்கிஷோர் சிங், சஹஸ்ராவைச் குந்தன் குமார், போஜ்பூரைச் சேர்ந்த சந்தன் யாதவ் ஆகியோர் இந்த மோதலில் உயிர்நீத்துள்ளனர்.
இவர்களின் உடல் பிகாருக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கட்சி வேறுபாடின்றி அனைத்து தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அம்மாநில மக்கள் வீரர்களுக்கு உணர்வுப்பூர்வமாகத் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் மக்கள் வீரர்களின் தியாகத்தைப் போற்றும்விதமான முழக்கங்களை எழுப்பி தங்கள் உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.
இதுவரை நாட்டிற்காகப் பல தியாகங்களை மேற்கொண்டதாகவும், இனிவரும் காலங்களிலும் இந்தச் சேவையை பிகார் மாநிலம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் எனவும் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்த மோடி!