ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் கங்காதர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது பேரனை கொடூரமாக தாக்கும் காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அந்தக் காணொலியில் தோன்றும் பெண் ஏழு வயதே நிரம்பிய தனது பேரனை கால்களால் எட்டி உதைக்கிறார். அச்சிறுவன் கதறி அழுதபோதும் அவனது காலின் மேல் ஏறி நிற்கிறார். இதனால் வலியால் அச்சிறுவன் துடிதுடிக்கிறான்.
இந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட அந்த வயதான பெண் குறித்து விசாரணை செய்தனர்.
பின்னர் பாலாசோர் குழந்தைகள் நல அமைப்பின் உதவியுடன் அப்பெண்ணின் வீட்டை அடைந்த காவல் துறையினர் குழந்தையை தாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனது பேரன் சேட்டை செய்ததால் அடித்ததாக அவர் தெரிவித்தார்.
அச்சிறுவனின் பெற்றோர் மும்பையில் வேலை செய்வதால் அவன் பாட்டியின் கவனிப்பில் வளர்க்கப்பட்டுவருகிறான். இந்தச் சூழலில் அவனது பாட்டியே காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.