கர்நாடக மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் பதவிகளை ஏலம் விட்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
பெல்லாரி மாவட்டம் குருகோடு தாலுகாவை சிந்திகேரி கிராம பஞ்சாயத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பைலூரு கிராமத்தில் ஊராட்சி மன்றங்களின் பொறுப்புகள் ஏறத்தாழ ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 5.7 லட்சம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74 திருத்தச் சட்டங்களும், 11 மற்றும் 12 அட்டவணைகளும் இந்தியக் குடிமக்களுக்கு அளித்திருக்கிற உள்ளாட்சி அதிகாரங்களை ஊர்கூடி விலைபேசுவது சட்ட விரோதம் என்பதைக் கூட உணராமல் இந்த ஜனநாயக விரோத செயல் அங்கே அறங்கேறியுள்ளது.
பைலர் கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்க்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாகவே, இந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத்தின் (கிராம பஞ்சாயத்து) அலுவலக பொறுப்புக்கு இத்தனை போட்டி ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
ஊருக்கு பொதுவான இடத்தில் கூடிய கிராம மக்கள் கூட்டத்தில், ஊராட்சி மன்றத்தின் பதவிகளில் போட்டியிட விரும்புவோர் விலை பேசலாம் என ஏலத்தை நடத்தியுள்ளனர். இரண்டு லட்சம் ரூபாயில் தொடங்கிய இந்த ஏலம் கடைசியாக ரூ. 5 லட்சத்து 70 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏலத்தின் மூலமாக மொத்தமுள்ள 26 பதவிகளில் 12 பேர் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏலத்தில் ரூ .51 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் குருகோடு தாசில்தார் ராகவேந்திர ராவ் பேசியபோது, “இது தொடர்பாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை என்றாலும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அலுவலர் நந்தினியின் உத்தரவின் பெயரில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள எங்கள் எம்.சி.சி குழு பைலூரு கிராமத்தைச் சென்றடைந்துள்ளது. அந்த காணொளியில் இருந்தவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஏலதாரர்கள் அனைவருக்கும் எதிராக வழக்கு பதிவுசெய்யப்படும். ஏலம் விடப்பட்டதாக கூறப்படும் ஊராட்சி தலைவர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காணொளியில் உள்ள அனைவர் மீதும் தேர்தல் நெறிகளை மீறிய வழக்கு பதிவு செய்யப்படும்”என்றார்.
இதையும் படிங்க : “ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக தொடர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறது” - அசோக் கெலாட்