'ஆத்மநிர்பர் பாரத்', 'டிஜிட்டல் இந்தியா' போன்ற திட்டங்களின் மற்றொரு முயற்சியாக, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புதிதாக எஸ்பிஐ ரூபே கிரெடிட் கார்ட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த கார்டை ஐஆர்டிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தேசிய பரிவர்த்தனை கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்
இந்தக் கிரெடிட் கார்ட அறிமுக விழாவில் பேசிய அவர், "எஸ்பிஐ கிரெடிட் கார்டு அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் குறைந்தபட்சம் 3 கோடி வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும். தற்போது, ஒவ்வொரு ஆண்டும் ஐஆர்சிடிசியில் 30 மில்லியன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. எனவே, அதில் 10 விழுக்காடு மக்களான 3 கோடி பேருக்கு கிரெடிட் கார்டை வழங்குவது கடினம் ஒன்று கிடையாது. கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் இந்தக் கிரெடிட் கார்ட மக்களுக்கு அவசியம் " எனத் தெரிவித்தார்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு சிறப்பு அம்சங்கள்:
- ஐஆர்டிசி மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு பரிவர்த்தனை கட்டணத்தில் 1 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படுகிறது.
- ஏசி 1, ஏசி 2, ஏசி 3 ரயில் டிக்கெட்களின் மதிப்பில் 10 விழுக்காடு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- கிரெடிட் கார்டு ஆக்டிவேஷன் போனஸாக பயனர்களுக்காக 350 புள்ளிகள் அளிக்கப்படுகிறது. இதைப் பயணம், உணவு, பொழுதுபோக்கு தளங்களில் உபயோகிக்கலாம். ஒரு போனஸ் புள்ளியின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடப்படும்.
- ரிவார்ட் புள்ளிகளை பயன்படுத்தி ஐஆர்டிசி தளத்தில் இலவச டிக்கெட்டையும் புக்கிங் செய்யலாம்.
- இந்தக் கார்டு உபயோகிப்பதால் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் கட்டணத்தில் ஒரு விழுக்காடு தள்ளுபடியும், பிக்பேஸ்கட், அஜியோ உள்ளிட்ட பல ஆன்லைன் தளங்களிலும் சலுகைகள் கிடைக்கபடுகிறது.