மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸ் முதல்முதலில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தூண்டித்துக் கொண்டன. இதனிடையே, டிசம்பர் 23 முதல் 31ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு இந்தியா தடைவிதித்தது.
விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு
இந்நிலையில், பிரிட்டனுக்கு செல்லும் விமானங்களின் தடை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், "பிரிட்டனுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்க திட்டமிட்டுவருகிறோம்.
இதுகுறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும். டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு தற்காலிக தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தனிப்பட்ட அளவில் முன்கூட்டியே கூறுகிறேன். நவம்பர் 25ஆம் தேதி முதல், பிரிட்டனிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டுவருகிறோம்.
இதுவரை, அங்கிருந்து வந்த ஏழு பேர் மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார். வாரத்திற்கு, இந்தியா - பிரிட்டன் இடையே 67 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏர் இந்தியா, விஸ்டாரா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக் ஆகிய நான்கு நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் தினமும் 2000 முதல் 2500 பேர் பயணிக்கிறார்கள்.