கரோனா வைரஸ் தொற்றைப் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன்படி, மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.
அத்தியாவசியப் போக்குவரத்துத் தவிர, அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இவ்வேளையில், அனைத்து சுங்கச் சாவடி கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (மார்ச் 26) முதல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் சுங்கச் சாவடி கட்டணங்களை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடி கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது அவசரகால சேவைகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நேரத்தையும் மிச்சப்படுத்தும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.