இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக வேகமாகப் பரவிவருகிறது. இதையடுத்து நேற்று மத்திய சுகாதாரத்துறை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனம், வணிக வளாகங்கள் மார்ச் 31ஆம் வரை மூடிவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி மாநில அரசுகளும் சூழலுக்குத் தகுந்தாற்போல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா தடுப்பு குறித்து சிறப்பான ஆலோசனை சொல்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார். சிறப்பான முயற்சிகளை எடுத்துள்ள அரசைப் பாராட்ட வேண்டும் எனவும் இது போன்ற விஷயங்களில் தேவையற்ற அரசியல் செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் வேளையில், கார்த்தி சிதம்பரம் மோடி தலைமையிலான மத்திய அரசைப் பாராட்டியுள்ளது பேசுபொருளாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!