தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் உதவிப்பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்காக வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளின்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், குறைந்தபட்சம் 75 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கு, ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவதுடன், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றிக்க வேண்டும் என்றும், அல்லது தகுதித் தேர்வுகளில் முதல் 20 இடம் பெற்றிக்க வேண்டும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிலவும் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, மத்திய இருக்கை ஒதுக்கீடு வாரியம் (சிஎஸ்ஏபி) என்.ஐ.டி.கள் மற்றும் பிற மத்திய நிதியுதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேர்க்கைக்கான தகுதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ - முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.