இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மார்ச் இறுதிவாரத்தில் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன. ஊரடங்கு காலத்தில் சரக்கு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மே 25ஆம் தேதிமுதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. மே 25ஆம் தேதிமுதல் ஜூன் 25ஆம் தேதிவரை மட்டும் 21,300 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 18.8 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாகவும் விமான துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உள்நாட்டில் இயக்கப்படும் பயணிகள் விமானங்களின் எண்ணிக்கையை 45 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. விமான பயணத்திற்கு எழுந்துள்ள தேவையையும் இப்போது அளிக்கப்பட்டுவரும் சேவையையும் ஆய்வுசெய்து இந்த முடிவு எடுத்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமான நிறுவனங்களுக்கு இருக்கும் சவால்கள் குறித்து இணைய கருத்தரங்கு ஒன்றில் பேசிய இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலர் வில்லி பவுட்லர், "இந்திய விமான துறையில் தற்போது சவால்கள் ஏற்பட்டுள்ளபோதும், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இந்தியர்களால் இப்போது குறைந்த விலையில் நாடு முழுவதும் பயணிக்க முடிகிறது" என்றார்.
இந்தியாவில் தற்போது உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ள போதும், சர்வதேச விமான சேவை ஜூலை 15ஆம் தேதிவரை ரத்துசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, உள்நாட்டு விமான சேவை 55 விழுக்காடாக அதிகரித்த பின் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து யோசிக்கலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10% கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்! - இண்டிகோ