டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் வழக்கமாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து தாங்கள் சார்ந்துள்ள நாட்டின் தூதர் என்பதற்கான ஆதாரத்தை அளிப்பர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது வழக்கம்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த நிகழ்வு காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது, வெளிநாட்டு தூதர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,” புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களுக்கு வாழ்த்துகள்.
இந்தியா மூன்று நாடுகளுடனும் ஆழமான வேரூன்றிய உறவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த நாடுகளுடன் உலகளாவிய முக்கிய பிரச்னைகள் குறித்து பகிர்ந்து கொள்ளும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலை கையாள்வதற்கு உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது. இந்தச் சூழலில், தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் இந்தியா முன்னணியில் இருந்துவருகின்றது.
வரும் 2021-22 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பை வலுப்படுத்தவும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது”. என்று தெரிவித்தார். .
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து காணொலி மூலம் ராஷ்டிரபதி பவனில் நற்சான்றிதழ் வழங்குவது இது இரண்டாவது முறையாகும். இதில், டேவிட் பைன்- நியூசிலாந்தின் உயர் ஆணையர்; சர் பிலிப் பார்டன்- யுனைடெட் கிங்டம் ஆணையர், அகாடோவ் தில்ஷோட் காமிடோவிச்- உஸ்பெகிஸ்தான் குடியரசின் தூதர் ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.