புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தைப்புதுக்குப்பம் பகுதியில் அருள் என்பவர் ஐந்து சகோதரர்களுடன் வசித்துவருகிறார். இவர்கள் தங்களது இடத்தில் வீடுகளைக் கட்டியுள்ளனர். புதியதாக இன்னொரு வீடுகட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பாமக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அருள்முருகன், திமுக மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் செந்தில்குமார், அரசியல் பிரமுகர்கள் சிலர் போலி பத்திரம் தயாரித்து அவர்களின் இடங்களில் சொந்தம் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.
தங்களிடம் இருப்பது நிலத்திற்கான உண்மையான பத்திரம் என்று நகராட்சியினர் சான்றளித்தும் தங்களை வீடு கட்டவிடாமல் தடுத்துவருவதாகவும், இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
அவர்களை உடனடியாகக் காவல் துறையினர் தடுத்துநிறுத்தி அருள், அவரது சகோதரர் ஆறுமுகத்தை கைதுசெய்தனர்.