இந்தியப் பிரதமர் தேசிய அளவு முடக்கத்தை அறிவித்த பின்பு பயணிகள் ரயில் அனைத்தும் நிறுத்தப்பட்டன, மற்ற ரயில்களும் செயலற்று நிற்கின்றன. ரயில்களில் உள்ள ஏசி கோச்களை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக பயன்படுத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நகரும் மருத்துவமனையாக ரயில்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், அரசாங்கம் இதனை அவசரகால திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர், ஏசி கோச்களில் சில மாற்றங்களை செய்து அதனுள் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது நகரும் மருத்துவமனைகளாகவும், தனிமைப்படுத்தும் அறைகளாகவும் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் முக்கியமான பயன்பாடு என்னவென்றால், இது கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல உதவும். இதன்மூலம் மருத்துவ உதவிகள் சரிவர கிடைக்கப்பெறாத பகுதிகளிலுள்ள மக்கள் முறையாக சிகிச்சை பெற முடியும் என தெரிவித்தார்.
மிலிட்டரி ஆம்புலன்ஸ் கோச்கள் தவிர நாட்டிலுள்ள அனைத்து ரயில்களும் இந்தியன் ரயில்வேஸ் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தம். 7,350 ரயில் நிலையங்கள் தொடர்போடு இந்தியன் ரயில்வேஸ் மொத்தமாக 13, 452 பயணிகள் ரயிலை 1,23,200 கிமீ இயக்குகிறது. ஒரு ரயிலில் 800 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.
மிலிட்டரி ஆம்புலன்ஸ் கோச்கள் போர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதை மனதில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2001 - 2002, இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய ‘ஆப்ரேசன் பரக்ராம்’-இன் போது இந்த மிலிட்டரி ஆம்புலன்ஸ் ரயில்கள் பெரிய அளவில் உதவியது.
இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய கூட்டத்தில், முப்படைகளின் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றனர். கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான அரசாங்கத்தின் முக்கிய கூட்டங்கள் அனைத்திலும் பிபின் ராவத் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.