சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை டிக் டாக் செயலியில் 'பொருத்தமற்ற மற்றும் ஆபாச காட்சிகள்' உள்ளன எனக் கூறி அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து இந்திய அரசு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை டிக் டாக் செயலியின் மூலம் தடை செய்ய கேட்டுகொண்டது. இதன் பேரில் இன்று அந்நிறுவனங்கள் இந்தியாவில் அதை பதிவிறக்கம் செய்வதை தடை செய்துள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து டிக் டாக் செயலி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் 3ஆம் தேதி இந்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.
இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், இதற்கு தான் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், நாட்டிலுள்ள சட்டத்தை மதித்தாக வேண்டும் என்றார். சீன நாட்டை சேர்ந்த இந்த செயலியை மாதத்துக்கு 54 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 'பொருத்தமற்ற மற்றும் ஆபாச' காட்சிகளால் இதனை பயன்படுத்தும் குழந்தைகளின் உளவியல் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை பயன்படுத்துவதில் பெரும்பான்மையானோர் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.