கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், 30 கிலோ தங்கம் பிடிபட்டது தொடர்பான சம்பவத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசிற்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினராக இருக்கும் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வழிநடத்தும் செயல்பாட்டின் பின்னணியில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இது முதன்மையாக ஊழல், ஒற்றுமை, மாநில நிர்வாகத்தின் குற்றமயமாக்கல் மற்றும் சிபிஐ (எம்) பிரகடனப்படுத்தப்பட்ட சித்தாந்தம், பொது பதவிகளை வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கான நடத்தை நெறிமுறையிலிருந்து மொத்த விலகல் ஆகியவற்றைப் பற்றியது, இது பல கட்சி மாநாடுகளால் பல தசாப்தங்களாக கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது.
உயர் அரசியல் தார்மீக அடிப்படையில் இருப்பதாகக் கூறும் ஒரு கட்சியாக விளங்கும் கம்யூனிஸ்ட், இந்த விவகாரத்தை விளக்கி, தவறு செய்யும் முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கான பொறுப்பு உங்களின் (யெச்சூரி) தலைமையில் உள்ளது. முதலமைச்சருக்கு அலுவலகத்திலும் அவரது பொறுப்பில் உள்ள துறைகளிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாது என்று கூறுவது உண்மையில் அவரது செயல்பாட்டு பாணி மற்றும் உங்கள் கட்சியின் செயல்பாட்டுக் குறியீடுகளைக் கெடுக்கும்.
துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 30 கிலோ தங்கத்தை ராஜதந்திர சாமான்களில் கடத்த வசதி செய்தபோது, இங்குள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் பி.எஸ்.எஸ்.சரித் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போதுதான் தங்க கடத்தல் வழக்கு முதலில் வெளிச்சத்துக்கு வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், மாநில ஐடி துறையில் பணியாற்றியவருமான ஸ்வப்னா சுரேஷின் பெயர் வெளிவந்தபோது மாநில அரசிற்கு நெருக்கடி அதிகரித்தது.
முதலமைச்சர் பினராய் விஜயனின் முதன்மைச் செயலர் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப செயலர் ஆகிய இரு முக்கிய பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர் எம்.சிவசங்கருடனான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டபோது மாநில அரசு மீதான குற்றச்சாட்டு வலுமை அடைந்தது. தங்கக் கடத்தல் வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடங்கியுள்ளது. இதில், அமைச்சர்கள் மற்றும் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் உள்ளிட்டோர் ஈடுபட்டிருப்பது தெரியவரும்
உங்கள் கட்சியின் மாநிலத் தலைமைக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. முதலமைச்சர் அல்லது அவரது அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து, இந்த சூழலில், எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து, உங்கள் கட்சியின் நிலைபாடு குறித்த பதிலுக்காக கேரள மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.