இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை பாஜகவினர் வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங், நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் மோடி இரண்டாவது முறை வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள சங்கத் மோச்சான் என்ற அனுமன் கோயிலுக்கு தங்க கிரீடம் வழங்குவதாக அப்போது வேண்டிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து, நேற்று பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி 1.25 கிலோ எடையில் தங்க கிரீடத்தை அனுமனுக்கு காணிக்கையாக வழங்கி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா கண்டிராத வகையில் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்திவருகிறார். மோடியும் நாட்டின் எதிர்காலமும் அனுமனுக்கு அளிக்கப்பட்ட தங்கம்போல் ஜொலிக்க வேண்டும். இந்த கிரீடம் வாரணாசி மக்கள் இறைவனுக்கு அளிக்கும் பரிசு" எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு விளக்குகள் ஏற்றி, ஏழைகளுக்கு இனிப்புகள், பழங்கள் வழங்கப்பட்டன.