கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வாரத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதேபோல், இந்தியாவிலும் மார்ச் இறுதி வாரம் முதல் அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டன.
சரக்கு போக்குவரத்திற்கும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் "வந்தே பாரத்" திட்டங்களுக்கும் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 51,314 இந்தியர்களை 300க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவந்துள்ளதாக கோஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோஏர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ வாடியா கூறுகையில், "வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க கோஏர் ஊழியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க கோஏர் தயாராகவே உள்ளது” என்றார். கோஏர் நிறுவனம் சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே 113 விமானங்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் 19,916 பயணிகளை கோஏர் தாயகம் அழைத்துவந்துள்ளது. அதிலும் குறிப்பாக சவூதி அரேபியாவின் தம்மம்(Dammam) நகரில் இருந்து 72 விமானங்கள் மூலம் 12,659 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல ரியாத் நகரில் இருந்து 34 விமானங்கள் மூலம் 6,027 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குவைத்தில் இருந்து 67 விமானங்கள் மூலம் 11,759 இந்தியர்களையும், துபாயில் இருந்து 34 விமானங்கள் மூலம் 6,094 இந்தியர்களையும் அபுதாபியிலிருந்து 21 விமானங்கள் மூலம் 3,725 இந்தியர்களையும் கோஏர் தாயகம் அழைத்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெரும் சரிவை சந்தித்துள்ள விமானப் போக்குவரத்து!