கணைய அழற்சி நோயால் கடந்த ஓராண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் பரிக்கரின் உடல்நிலை சீராக உள்ளது என அம்மாநில முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மனோகர் பரிக்கரை நேரில் சந்தித்து பேசிய முன்னாள் எம்எல்ஏ சித்தார்த், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும், வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார். மார்ச் 4 ஆம் தேதியன்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசிய கோவா கேபினட் அமைச்சர் விஜய் சர்தேசாய், அவருக்கு புற்றுநோய் முற்றிவிட்டது. இருப்பினும், மாநில மக்களுக்காக இன்னும் உழைத்து கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பரிக்கர் அமெரிக்கா, மும்பை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.