உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகள் திணறுகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில் உலகளவில் இதுவரை ஏழு கோடியே 26 லட்சத்து 54 ஆயிரத்து 602 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 19 ஆயிரத்து 28ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 8 லட்சத்து 71 ஆயிரத்து 457ஆக அதிகரித்துள்ளது
உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்க உள்ளது. அங்கு இதுவரை ஒரு கோடியே 67 லட்சத்து 37 ஆயிரத்து 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 6 ஆயிரத்து 459 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 24 ஆயிரத்து 439ஆக அதிகரித்துள்ளது. 67 லட்சத்து 6 ஆயிரத்து 369 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 84 ஆயிரத்து 100ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்து 88 ஆயிரத்து 159ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை அவசர தேவைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு இன்று (டிசம்பர் 14) முதல் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த வார இறுதிக்குள் 30 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கரோனா தடுப்பூசி விநியோக திட்டங்களைக் கவனிக்கும் மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார்.
பைசர் மற்றும் பயோ என்டெக் எஸ்.இ.யின் கோவிட் -19 தடுப்பூசிக்கு கனடா சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதையடுத்து, பைசர் நிறுவனத்திடமிருந்து கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.