சீனா
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் புதிதாக 100க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்கத்திலேயே தொற்று பரவி வந்த நிலையில், தற்போது 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக வந்துள்ள செய்தி, சீன மக்களை மீண்டும் அச்சமடைய செய்துள்ளது. ஜின்ஜியாங்கின் வடமேற்கு பகுதியில் 89 பேரும், வடகிழக்கு மாகாணமான லியோனிக்கில் எட்டு பேரும், பெய்ஜிங்கில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து சீனா திரும்பிய மூன்று பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜின்ஜியாங்கிற்கு வெளியே சீனாவின் மற்ற இடங்களில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. சீனாவில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 60ஆக உள்ளது. அதில், 4,634 பேர் உயிரிழந்தனர்.
தென்கொரியா
தென்கொரியாவை பொறுத்தவரை புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மீதமுள்ள 34 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆகும். தென்கொரியாவில் இதுவரை மொத்தமாக 14 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 பேர் அங்கு உயிரிழந்தனர். கடந்த மே மாத தொடக்கத்தில் தென்கொரியா அரசு தளர்வுகளை நீக்கியது முதல், நாள்தோறும் 20 முதல் 60 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
நியூசிலாந்து
நியூசிலாந்தை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு சமூகப்பரவலும் இல்லை. அந்த நாட்டிற்குள் நுழைபவர்களை கட்டாயம் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளியிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்த ஏற்படும் செலவுகளுக்கு, கட்டணம் வசூலிக்கவும் நியூசிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது, இதற்காக ஒரு புதிய சட்டத்தை விரைந்து அமல்படுத்த நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:3ஆம் கட்ட பரிசோதானையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து!