புதிய நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய பெருந்தொற்று காலத்தில் புதிய கட்டடம் தேவையில்லை என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சி அடிக்கல் நாட்டுவிழாவை புறக்கணிக்க முடிவு செய்தது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வில் பங்கேற்றது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கருத்து தெரிவித்த காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்திரி, "கட்சியின் மேலிடம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மேற்கொள்ளும். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும். அதில், ஆசாத் பதிலளிக்க வேண்டும்" என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைமையை விமர்சிக்கும் விதமாக கடிதம் ஒன்றை குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காங்கிரஸ் பொது செயலாளர் பதவியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து குலாம் நபி ஆசாத் தனது விமர்சனக் கருத்தை தொடர்ந்து பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு; முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்