வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், அண்டை நாடான வங்க தேசத்திலிருந்து ஏராளமானோர் குடியேறியுள்ளனர். இதற்குப் பல ஆண்டுகளாக எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தியர்களைக் கண்டறிய மத்திய அரசு கடந்த ஆண்டு கணக்கெடுப்பை நடத்தியது. அதன் அடிப்படையில், 'NRC' எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான வரைவுப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில், சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன.
இதனால், சர்ச்சை எழுந்ததையடுத்து விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பது குறித்து மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த பட்டியல் ஆகஸ்ட் 31ஆம் தேதி (இன்னும் சில மணி நேரத்தில்) வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய், " நாளை வெளியாகவுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, அவர்கள் எதிர்காலம் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உண்மையான குடிமக்கள் பட்டியலில் (NRC) கண்டிப்பாக இடம்பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வெளிநாட்டவர் தீர்ப்பாயத்துக்கோ, உயர் நீதிமன்றத்துக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ எடுத்துச் சென்று நீதி பெற்றுத்தருவோம்.
மதம், இன கண்ணோட்டமில்லாமல் அனைத்து இந்தியர்களுக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அவர்களை இந்துக்கள், இஸ்லாமியர்கள், பெங்காலிகள் எனப் பிரித்து பார்ப்பதில்லை.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை வைத்து சிலர் அரசியல் செய்ய முயல்வார்கள். NRC-ஐ எந்த குறையும் இல்லாமல் அரசு செயல்படுத்தினால் பிறகு அரசியலுக்கு இடமில்லை" என்றார்.