ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்தது.
இதற்கு பாஜகவினரின் குதிரை பேரமே காரணம் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளது. இதற்கிடையில், குஜராத்தில் நடைபெற்றது போன்ற அசம்பாவிதங்கள் ராஜஸ்தானில் நடைபெறாமல் தடுப்பதற்காக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களும், அதன் ஆதரவு எம்எல்ஏக்களும் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பாஜகவின் திட்டங்களை முறியடிப்பது தொடர்பாகவும், மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாகவும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், மாநிலங்களை வேட்பாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ், அதன் கூட்டணி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் செயல் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதிஷ் புனியா, “காங்கிரஸ் தன்னுடைய கட்சியினர் மீதும், கூட்டணி கட்சியினர் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை, பாஜக மீது திணித்துவருகிறது.
பாஜக இதுவரை நேர்மையான வழிகளிலே செயல்பட்டுவருகிறது. மக்கள் பணிகளை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பணி செய்யவிடாமல் அடைத்து வைத்திருப்பதற்கு நிச்சயமாக காங்கிரஸ் மக்களிடம் பதிலளித்தாகவேண்டும். காங்கிரஸ் பாஜகவினர் மீது குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு தன்னுடைய கட்சியினர் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கட்டும்” என தெரிவித்தார்.