கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்நோக்கில் நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினசரி கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கும்விதமாக மத்திய அரசு 20 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"ஊடரங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறியும்விதமாக, மத்திய அரசு குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் கட்டுப்பாடுகளுடன் சில நிறுவனங்கள் இயங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும்வகையில் மத்திய அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்புகொள்ள உரிய அலுவலர்களை அந்தந்த மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்.
தொழிலாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன. கட்டுப்பாட்டு அறைகள் மூலம் இதுவரை நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குறை தீர்ப்புகள் பதிவாகியுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கண்டறியப்பட்டுள்ள குறைகளைத் தீர்க்க மத்திய அரசிற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் பார்க்க: பல மைல் தூரம் பயணம்! கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய அறக்கட்டளை!