1993ஆம் ஆண்டு நடந்த மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வலதுகரமாக இந்தியாவில் இயங்கிவந்தவர் ஷெரீப் கான். போதைப் பொருட்கள் கடத்தல், கொலை, கொள்ளை என தாவூத் இப்ராஹிமின் சமூக விரோத செயல்களை இங்கிருந்து செய்து தந்துவந்த ஷெரீப் கானின் உதவியாளராக பணியாற்றும் பாபு சோலங்கி என்பவரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை அலுவலர் ஒருவர் கூறுகையில், “கொள்ளை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டுவந்த பாபு சோலங்கி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கைது செய்ய சிறப்பு குழுவை அமைத்து தீவிரமாகத் தேடிவந்த சூழலில் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஆதலாஜ் அருகே அவர் ஒளித்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மாறுவேடத்தில் அங்கிருந்து மெஹ்சனாவை நோக்கி பயணம் மேற்கொண்ட பாபு சோலங்கியை, குஜராத் ஏ.டி.எஸ் சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.
பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் இப்ராஹிமின் வலதுகரமான ஷெரீப் கானுக்காக வேலைகளை செய்துதரும் குண்டர்களில் சோலங்கி மிக முக்கியமானவராக கருதப்படுகிறார்.
பாபு சோலாங்கி மீது 1999 முதல் 2019 வரை மும்பை, சூரத், பதான் மாவட்டத்தில் உள்ள சித்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் கொள்ளை, கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய நான்கு குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. சோலங்கி மும்பையில் இருந்து 2000ஆம் ஆண்டு குஜராத்திற்கு தப்பி சென்ற பாபு சோலாங்கி அங்கிருந்து தனது குழுவை இயக்கி வந்துள்ளார்.
மெஹ்சானாவில் உள்ள உஞ்சாவைச் சேர்ந்த பங்கு சந்தை முதலீட்டாளர் ஒருவருக்காக அகமதாபாத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களிடமிருந்து 10 கோடி ரூபாயை வசூலிக்க முயன்றதாக சோலாங்கி தலைமையிலான கும்பல் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மிரட்டி பணம் பறித்தல், குற்றச் சதி போன்றவற்றுடன் தொடர்புடைய சோலாங்கியை குஜராத் ஏ.டி.எஸ் விசாரித்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க : அரபு நாடுகளில் வசித்த 100 கேரள மக்கள் கரோனாவால் இறப்பு!