மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சை, கொல்லாமையைப் பற்றி தொடர்ச்சியாகப் பேசிவந்தார். அதேவேளையில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றியும் ஆழமான பார்வையைக அவர் கொண்டிருந்தார். தூய்மை குறித்து மிகுந்த கவனம் கொண்டிருந்த காந்தி சுற்றுச்சூழலுக்கு மனிதனால் எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது என்ற கருத்தைத் தனது எழுத்துகளில் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின் சத்தியாகிரகத்தில் தீவிரமாக ஈடுபட்ட காந்தி தனது ஆசிரம வாழ்க்கையில் பல்வேறு ஒழுங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். உண்மையைப் பேசுதல் என்பதன் மூலம் எதிர் தரப்பினரிடமும் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் காந்தி. அதேபோல் அகிம்சை கொள்கையைப் போதித்த அவர் பசுவின் பால் அதன் கன்றுக்கே சொந்தம் எனப் பசும்பால் பயன்படுத்தவதைக்கூட தவிர்த்துவந்தார். பின்னர் தன் மனைவியின் உடல்நிலை கருதியும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படியும் ஆட்டுப்பால் குடிக்கத்தொடங்கினார்.
ஆடம்பர உடைமைகளைத் தவிர்த்து எளிமையான வாழ்வை அறிவுறுத்திய காந்தி, அதற்கான விளக்கத்தையும் இயற்கையிடமே கண்டடைந்தார். மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் இயற்கையே இயல்பில் கொடையாக அளித்துள்ளது. அதையும் மீறிக் கூடுதல் நுகர்வை மனிதன் மேற்கொள்வது என்பது இயற்கைக்கு இழைக்கும் அநீதி எனக் கருதினார் காந்தி.
அன்னிய நாட்டில் பெருந்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என சுதேசி கொள்கையைக் கையிலெடுத்து கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் எளிமையான கதர் துணிகளையே பயன்படுத்த வேண்டும் என்று கதர் இயக்கத்தையும் உருவாக்கினார். பொருந்தொழிற்சாலைகள் ஏழை நாடுகளைக் காலணி ஆதிக்கத்தின் அடிமைகளாக மாற்றுவதை உணர்ந்த காந்தி, அத்தொழிற்சாலைகள் தனது ஊழியர்களை அடிமைகளாக மாற்றி அவர்களின் உழைப்பைத் திருடுவதாகக் குற்றம்சாட்டினார்.
மேற்கண்ட காந்தியின் பார்வையானது உலகிற்கு தற்போது பெரிதும் தேவைப்படுகிறது. நுகர்வுக் கலாசாரமானது உச்சத்திலிருக்கும் இக்காலத்தின் வளர்ச்சி என்ற பெயரில் அரசுகள் வெறும் பொருளாதார வளர்ச்சியையே மிகைப்படுத்தி திட்டங்களை வகுத்துவருகின்றன. மனிதவளத்தின் வளர்ச்சிகளான சுகாதாரம், சுற்றுச்சுழல் பாதுகாப்பு, தன்னிறைவு வாழ்க்கை போன்ற அம்சங்களிலும் அரசு கவனம் செலுத்த மறுத்துவருகிறது.
மனிதனின் தேவைக்கு இயற்கையே தேவையான கொடையை அளித்துள்ளது, பேராசைக்கு இயற்கையில் இடமில்லை என்றார் காந்தி. இந்த கருத்தே இயற்கைக்கும், நமது நவீன வாழ்விற்கும் உள்ள இடைவெளியை எளிதில் உணர்த்திவிடும்.