அறிவியல், நவீனம், இயந்திரங்கள் போன்ற புதுமைகளுக்கு எதிரானவர் காந்தி என்ற கருத்து பரவலாகவே உள்ளது. இது ஒரு தவறான புரிதல், காந்தியின் எழுத்துகள் சரியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதே இதற்குக் காரணம். காந்தி காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தற்போது காந்தி குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
காந்தி தனது வாழ்நாளில் அறிவியல் குறித்து அதிகமாகப் பேசிவந்தார், இதை புரிந்துகொள்ள அவரின் சுயசரிதையைப் படித்தாலே தெரிந்துகொள்ளலாம். மனிதன்-இயற்கை, மனிதன்-இயந்திரம், பொதுச்சமூகத்தில் மாற்று அறிவியலுக்கான இடம், ஆயுர்வேதம் குறித்த ஆய்வு, அறிவியல் கல்வி, அறிவியல் கொள்கை, காதியின் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அறிவியலை அணுகியவர் காந்தி. கடந்த இருபது வருடங்களில் மேற்கண்ட துறைகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன.
காந்தி தனது பல்துலக்கும் குச்சி தொடங்கி, ராட்டை சக்கரம்வரை அனைத்தையும் அறிவியல் கோணத்தில் அணுகினார். குறிப்பாக மனித உடலை அறிவியல் கருவியாகக் கண்டவர் காந்தி. காந்தி காலணி தைப்பவராகவும் ஆடை தைப்பராகவும் செவிலியாகவும் துப்புரவுப் பணியாளராகவும் தனது வாழ்க்கையில் பல பரிணாமங்களை வெளிப்படுத்தியுள்ளார். காந்தியின் இந்தப் பண்பு குறித்து ஜவஹர்லால் நேரு வியந்து பாராட்டியுள்ளார்.
1954ஆம் ஆண்டு அனு பந்தோபதாய் என்ற ஆய்வாளர் எழுதிய புத்தகத்தில் ஜவஹர்லால் நேரு எழுதிய முன்னுரையில், "இத்தனை செயல்களில் ஒரு மனிதனுக்கு ஈடுபாடு வருமா என்பது பெரும் ஆச்சரியம். சிறு சிறு விஷயங்களுக்குக்கூட மதிப்பளிக்கும் பண்பு கொண்டவர் காந்தி. அவரின் அடிப்படை குணம் இது" என்றார்.
![Gandhi, காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4463411_gandhi.jpg)
அவரின் இந்த குணம்தான் அவரை அறிவியல் பக்கம் திருப்ப ஆரோக்கியமான, ஒருங்கிணைந்த அர்த்தமுள்ள வாழ்வை நடத்தத் தூண்டுதலாக இருந்துள்ளது. காந்திய இயக்கம் நடைபெற்ற காலத்தில் காந்தியின் புகழைக் கண்டு ஆங்கிலேய ஆய்வாளர்களும் அறிவியலாளர்களும் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் காந்தியின் வருகை அறிவியலின் அடிப்படை கருத்துகளை மக்கள்மயமாக்கியது என்பதைக் கண்டறிந்தனர். கடைக்கோடி மனிதனுக்குத் தொழில் குறித்த இயக்கமும் தற்சார்பு வாழ்வும் சென்றடைய காந்தியின் செயல்பாடுகள் காரணமாக அமைந்தது.
அதேவேளையில் அறிவியல் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமே தவிர மனிதனை அற உணர்விலிருந்து பிறழவைக்கக் கூடாது என்பதைத் தெளிவாக உணர்ந்தவர் காந்தி. பி.சி. ரே, ஜே.சி. போஸ் ஆகிய அறிவியல் அறிஞர்களின் முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் காந்தி. இதன் காரணமாகவே 1927ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அங்கு சமுதாயத்தில் மாணவர்கள், அறிவியலின் பங்களிப்பின் அவசியத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். 1934ஆம் ஆண்டு தொடங்கி அனைத்து இந்திய கிராம தொழிலாளர் கூட்டமைப்பை காந்தி உருவாக்கினார். அதில் சி.வி. ராமன், பி.சி. ரே, ஜே.சி. போஸ், சாம் ஹிக்கின்பாத்தம் போன்ற பல அறிவியல் அறிஞர்கள் இருந்தனர். அறிவியல் கல்வியைத் தாய்மொழியில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய காந்தி, கல்வியின் மூலம் தன்னை தொடர்ச்சியாகத் தகவமைத்துக்கொண்டார்.