ஒக்ஸ்பாம் என்ற அமைப்பு 2018ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவின் 73 விழுக்காடு சொத்துகள் நாட்டில் வெறும் ஒரு விழுக்காடு உள்ள பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. அதே சமயம், 67 கோடி ஏழைகளின் சொத்து மதிப்பு வெறும் ஒரு விழுக்காடே அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய பொருளாதாரமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாட்டின் ஜிடிபி வளர்ச்சியானது, ரிசர்வ் வங்கி கணிப்புக்கும் (6.9) கீழ் குறைந்து 5.8 விழுக்காடாக உள்ளது. இந்திய தேசத்தின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும், முறையற்ற பொருளாதார பங்கீடும்தான் பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இந்த சூழலில்தான், காந்தியப் பொருளாதாரக் கொள்கைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் பொருளாதாரம் என்பது ஒரு சிலரின் கைகளில் மட்டும் இல்லாமல் பாகுபாடின்றி அனைத்து மக்களிடமும் சமமாக இருக்கவேண்டும் என்றும், அதுவே சமத்துவ சமூகத்துக்கு வழிவகுக்கும் என்றும் காந்தியடிகள் நம்பினார்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு வாரியம் எடுத்த கணக்கெடுப்பின்படி, நாட்டில் வேலையில்லா திண்டாட்டமானது கிராமப்புறங்களில் 5.3 விழுக்காடு, நகர்ப்புறங்களில் 7.8 விழுக்காடு என சராசரியாக 6.1 விழுக்காடாக உள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி தனியார் பத்திரிக்கை ஒன்று, இந்திய நூற்பாலைத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்துவருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதில் கடும் நஷ்டத்தால் நூற்பாலை உரிமையாளர்களால் பஞ்சைக் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 கோடி பேர் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
இதேபோல, தேயிலைத் தொழில்துறையும் கடும் நெருக்கடியைச் சந்தித்துவருவதாக ஆகஸ்ட் 1ஆம் தேதி மற்றொரு பத்திரிக்கையிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனால், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், ஜிஎஸ்டியை குறைக்காவிட்டால் பார்லே நிறுவனத்தில் பணிபுரியும் 10,000 பேர் வேலை இழக்கக்கூடும் என்று அந்நிறுவனம் எச்சரித்திருந்தது.
மற்றொருபுறம், மீண்டும் பதவியேற்றுள்ள மோடி அரசாங்கம் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகளிலும், அவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. இந்த ஆண்டு, சுமார் ரூ. 90,000 கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான இலக்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 80 ஆயிரம் கோடியை விட அதிகமான அரசு பங்குகள் விற்கப்பட்டு நிதிப் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதுதான் ஒரு நாட்டின் சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடா?, நாடே கடும் பொருளாதார அபாயத்தை நோக்கிச் செல்கையில் அரசோ இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும். மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் ஐந்து ட்ரில்லியன் அளவிற்குப் பொருளாதார நிலையை எட்ட வேண்டுமென்று அரசு அறிவித்துள்ளது வினோதமாக உள்ளது.
ஆனால், பொருளாதாரத்தைப் பற்றிய காந்தியப் பார்வை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. காந்தியடிகள் இயந்திரங்களுக்கு எதிரானவர் இல்லை. மாறாக தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கச் செய்யப்படும் இயந்திரமயமாக்கலையே எதிர்த்தார். அது பல்லாயிரக்கணக்கானவர்களை வேலையில்லாதவர்களாக மாற்றும் என்றார்.
பெரு முதலாளிகள் அதிக லாபம் அடையவேண்டும் என்ற பேராசையே அதீத இயந்திரமயமாக்கலுக்குக் காரணம். எனவே, காந்தி தன் பொருளாதார சிந்தனைகளில் மனிதர்களேயே முன்னிலைப்படுத்தியுள்ளார். இயந்திரங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க கூடாது என்றார். சில விஷயங்களுக்கு இதிலிருந்து விலக்களித்தும் சிந்தித்தார் காந்தியடிகள். உதாரணமாக, தையல் இயந்திரத்தைக் காந்தி பயனுள்ள ஒன்றாகக் கருதினார். ஆனால், மனிதனின் அடிப்படைத் தேவையாக இல்லாத கார்களை அவர் எதிர்த்தார்.
காந்தியடிகள் இயந்திரங்களை மனித உடலுடன் ஒப்பிட்டார். இயந்திரங்கள் மனித குலத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் வரை அவைகளை அனுமதித்தார். மனித உடலைப் போலவே இயந்திரங்களும் தவிர்க்க முடியாதவை என்று காந்தியடிகள் தீர்க்கமாக நம்பினார். ஆனால், மனித உடல்தான் ஆத்மாவின் விடுதலைக்குத் தடையாக இருப்பதாக நம்பினார். இயந்திரங்களே இந்தியாவை ஏழ்மையான நாடாக மாற்றியுள்ளதாகவும், அதுவே தொழிலாளர்களை அடிமையாக மாற்றி முறையற்ற வகையில் பெரு முதலாளிகளை அதிக லாபம் அடைய வைத்தது என்றும் அவர் கூறினார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஏழைகளால் போராட முடியும். ஆனால், அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் பக்கபலமாகப் பணக்காரர்கள் இருக்க வேண்டும் என்றார் காந்தியடிகள்.
நம்மைச் சுற்றியுள்ள இயந்திரமயமான தயாரிப்புகளில் எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்ற கேள்விக்கு, காந்தி சுதேசியின் கொள்கையைப் பின்பற்றுங்கள் என்றும், இயந்திரமயமாக்கலுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பதிலளித்தார். அதேசமயம், இயந்திரத்தால் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் ஒரே அடியாக கைவிடுவது என்பது சாத்தியமில்லை என்று காந்தி உணர்ந்தே இருந்தார். அதனால்தான் அவற்றை படிப்படியாக குறைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற, முயற்சிகளை மற்றவர்கள் முன்னெடுக்கும் வரை காத்திருக்காமல் நாமே முன்னெடுக்க வேண்டும் என்றார். இதற்கான ஒரு உதாரணம், ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிரெட்டா துன்பெர்க், விமானங்களால் அதிக கரிய அமில வாயு வெளியேறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ’விமானங்களால் நமக்கு அவமானம், ரயிலே நமக்குப் பெருமை’, என்ற ஒரு பரப்புரையை மேற்கொண்டார். இந்த பரப்புரையால், ஸ்வீடன் நாட்டில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இதேபோல, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாபி ராமகாந்த் என்பவர் காரை விடுத்து பொதுப்போக்குவரத்ததையும் சைக்கிளையும் பயன்படுத்த ஆரம்பித்தார். இயந்திரமயமாக்கலைக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சியினால் நாம் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவால் காலநிலை மாற்றம் ஆகும்.
காந்திய சிந்தனைகள் இக்காலத்திலும் உகந்த ஒன்றுதான் என்பது நமக்கு 2006ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட, ’தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்’ மூலம் அறிந்துகொள்ளலாம். இத்திட்டம்தான் பிற்காலத்தில் ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. இத்திட்டமானது இயந்திரங்களையும் ஒப்பந்தக்காரர்களையும் தடை செய்து, காந்திய சிந்தனையான மனிதர்களை சார்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம், இயந்திரங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டால் நாட்டிலுள்ள பல கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதே ஆகும். தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு காந்தியடிகளின் பொருளாதார பார்வை உதவும் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்!