1917ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கம் தான் பயணித்துவந்த நிலையிலிருந்து புதிய வழியைத் தேர்ந்தெடுத்தது. அகிம்சை, சத்தியம் என்றத் தத்துவங்களைக் கொண்டு பிகார் மாநிலம் சம்பரண் பகுதியில் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் காந்தி. இந்தியா இதுவரை சத்தியாகிரகப் போராட்டத்தைக் கண்டிருக்கவில்லை. ஆனால் காந்தியோ தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி வெற்றியும் கண்டுள்ளார்.
1915ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய காந்தி சில ஆண்டுகளில் பிரபலம் அடையவில்லை. காங்கிரசின் சாதாரண உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்துவந்த அவருக்கு சம்பரண் சத்தியாகிரகம்தான் திருப்புமுனையாக அமைந்தது. தனது சத்தியசோதனை நூலில் அதை விரிவாக விவரித்துள்ளார் காந்தி. அகிம்சை என்ற தேவதையை சம்பரணில் கண்டதாக நெகிழ்ச்சியுடன் காந்தி குறிப்பிடுகிறார்.
இதையும் பார்க்கலாமே: காந்தியின் நினைவலைகளை சுமந்து நிற்கும் ஆசிரமம்!
ராஜ்குமார் சுக்லா என்ற விவசாயி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க சம்பரண் வந்த காந்திக்கே இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. வன்முறையற்ற போராட்ட வழி ஐரோப்பாவில் பாசிவ் ரெசிஸ்டென்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டுவந்தது.
அதன் அடிப்படையில் காந்தியின் அகிம்சை போராட்டம் இந்தியாவின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. அகிம்சையே முதன்மை அறம் என்ற வாசகத்தை அடிப்படையாகக் கொண்ட காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை வடிவமைத்தார்.
இந்தப் புதிய கருத்து முடங்கிக்கிடந்த இந்திய மக்களிடையே உற்சாகத்தைப் புகுத்தியது. ஆங்கிலேயர்களின் அடிமைகளாகக் கிடந்த விவசாயிகள் காந்தியின் வருகையால் நம்பிக்கையின் ஒளியைக்கண்டனர். அந்த நம்பிக்கையே அதுவரை சரிவையே கண்டிராத ஆங்கிலேய ஆட்சியாளர்களை சம்பரணில் அடிபணியவைத்தது. அகிம்சை தேவதை காந்திக்கு அளித்த பரிசாகத் தந்த சம்பரண் வெற்றி இந்திய விடுதலை இயக்கத்தின் மைல்கல்லாக அமைந்தது.
காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தில் பலருக்கு உடன்பாடு இல்லை. காந்தி மீது தனிப்பட்ட முறையில் பெரும் மதிப்பு வைத்திருப்பதாகக் கூறிய லாலா லஜபதிராய், அவரின் சத்தியாகிரகம் மக்களை பலவீனர்களாக மாற்றிவிடும் எனக் குற்றம் சாட்டினார். ஆனால் நீண்டகால வெற்றிக்குச் சத்தியாகிரகமே சிறந்தவழி என வரலாற்றில் நிரூபித்துக்காட்டியவர் காந்தி.
இதையும் படிக்கலாமே: 'உடல் நலனே உண்மையான செல்வம்' - ஆரோக்கியம் குறித்து காந்தியின் பார்வை
வீரம், விடாமுயற்சி, மதிப்பு, அஞ்சாமை ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் அகிம்சை என்று சத்தியாகிரகத்தை நெறிமுறைப்படுத்தினார் காந்தி. அந்த நெறியே மக்கள் வெற்றியாக சம்பரணில் உருமாறி நின்றது.