காந்தியின் பொருளாதார சிந்தனைகள்:
பலரும் காந்தியடிகள் முன்வைத்த பொருளாதாரத்தை கற்பனையான ஒன்றாகவும் அடைய முடியாத ஒன்றாகவுமே கருதுகின்றனர். ஆனால், உண்மையில் காந்தியடிகள் முன்வைத்த பொருளாதாரம் சோசலிசத்தை உள்ளடக்கிய எளிமையான ஒன்று.
காந்தி முன்வைத்த பொருளாதார சிந்தனைகள் என்பது பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய பல்வேறு முரண்பட்ட அம்சங்களை ஒன்றிணைக்கும் ஒரு புது முயற்சியாகும். காந்தியடிகள் பொருளாதாரத்தையும் நெறிமுறைகளையும், வளர்ச்சியையும் சமத்துவத்தையும், செல்வத்தை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் ஒன்றிணைக்க எண்ணினார். இவை அனைத்தும்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அடிப்படையான, ஆனால் ஒவ்வொன்றுக்குமிடையே முரண்பட்ட ஒன்றாகும்.

ஒரு பொருளாதார அமைப்பானது, அதிலுள்ள அனைவரும் பணிபுரிவதற்கு வாழ்வதற்கு போதிய பிரதிபலன்களையும் சமமான வாய்ப்புகளையும் வழங்கவேண்டும் என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். காந்தியடிகள் ஒருபோதும் ஆடம்பர வாழ்க்கையை ஊக்குவிக்கவில்லை; மக்கள் ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஒர் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே அவர் விரும்பினார்
கிராமப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வரைமுறையற்ற தொழில்மயமாக்கலை காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். மாறாக கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க, மக்கள் விவசாயத்திலும் சிறு குறு தொழில்களிலும் ஈடுபடவேண்டும் என்பதே காந்தியின் யோசனை.
அச்சமயத்தில் இந்தியா பெரியளவில் விவசாயத்தையே நம்பியிருந்ததால் காந்தியடிகள் இந்த யோசனையை முன்வைத்தார். இந்தியா அதிக மக்கள் தொகை காரணமாக, தொழிலாளர்கள் வளம் பெற்ற ஒரு நாடாக இருந்தது மற்றொரு காரணம்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது பரவலாக்கப்பட்டு அனைவருடைய வளர்ச்சியையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பதே காந்தியடிகளின் பார்வை. அவ்வாறு அடையும் வளர்ச்சியின் மூலமே சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை காந்தி உறுதியாக நம்பினார்.

மறுபுறம், ஒரு ஒருகிணைந்த கூட்டமைப்பின் மூலம் செயல்படும் வணிக மாதிரியை காந்தி ஆதரித்தார். அதில் கிடைக்கும் லாபத்தை அனைத்து பங்குதாரர்களுடனும் சரி சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இதன் மூலம் ஏழை மக்கள் சுரண்டுப்படுவது தடுக்கப்படும் என்றும், அனைத்து செல்வங்களும் ஒரே இடத்தில் குவிப்பதை தடுக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் காந்தியடிகள்.
காந்திய பொருளாதாரம் இன்றைய சமுதாயத்தில் பொருந்தக் கூடியதா?
காந்தி முன்வைத்த பொருளாதரா சீர்திருத்தங்களைப் பற்றி ஒருவர் விவாதிக்கும்போது, அது பல நாட்டுப் பொருளாதாரங்களும் ஒன்றிணைக்கப்பட்டுச் செயல்படும் இக்காலத்து தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் நிறைந்த சமூகத்தில் ஏற்றதா என்ற கேள்வி எழலாம்.
இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்ள ஒருவர் காந்தியின் காலத்திலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை அறியவேண்டும்.
முக்கியமாக இரு மாற்றங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது எடுக்கபட்ட பொருளாதாரக் கொள்கை முடிவுகளே இந்திய பொருளாதாரத்தின் போக்கை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தது. காந்திய பொருளாதார சிந்தனைகளிலிருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்ல ஆரம்பித்தது. சுதந்திரத்திற்கு பிறகு ஜவஹர்லால் நேரு பிரதமராக பொறுப்பேற்றார், காந்தியின் கொள்கைக்கு நேரெதிராக இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

இது காந்திய கொள்கைக்கு எதிரான ஒன்றாகும். மக்கள் தொகை அதிகம் உள்ள படிப்பறிவு இல்லாத ஏழை மக்கள் அதிகம் கொண்ட இந்தியா ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டது. இப்படிப்பட்ட இந்தியாவில் காந்திய பொருளாதார மாதிரியை செயல்படுத்துவது கடினமாகும்.
முதன்மையாக செல்வம் உருவாக்கப்பட்டால்தான் அதனை பிரித்துத் தரமுடியும். எனவே, செல்வத்தை உருவாக்குவதற்காக தொழில்மயமாக்கலை நோக்கி நம் பொருளாதாரம் சென்றது. இருந்தபோதிலும் பொருளாதார பிரச்னை தொடர்ந்து மோசமடைந்தது.
எனவே, சீர்திருத்தங்கள் என நாம் சொல்லக் கூடிய தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கலை நோக்கி இந்தியா தள்ளப்பட்டது.
இந்தக் கொள்கையும் காந்தியத்துக்கு எதிரான ஒன்றுதான். ஆனால், இந்த முறை உள்நாட்டு பொருளாதார கட்டாயத்தின் பேரில் இந்த பொருளாதார மாற்றம் நடந்தது.
இந்த பொருளாதார மாற்றத்தால் வளர்ச்சி ஏற்பட்டு செல்வம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த செல்வம் மக்களிடையே சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. இது புதிய தாராளமயமாக்கல் கொள்கைக்கு உரித்தான செயல்பாடாகும். இதனால், வேலாண்துறை சேவைத்துறையாக மாறியது. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமானது. எந்த நாட்டின் கொள்கைக்காக காந்தி வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அந்த நாட்டில் அவரின் கொள்கைக்கு முக்கியத்துவம் குறைந்தது.

தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்ட பின்னர், சமநிலை குறைந்து, கிராமப்புற பிரச்னைகள் அதிகரித்தது. கிராமங்களில் இருந்து மக்கள் அதிகப்படியாக நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. இதனால் வறுமையும் அதிகரித்தது. உலகின் மிக ஏழையான குழந்தைகளில் 30.3 விழுக்காடு இந்தியாவில் வாழ்கின்றனர் என யுனிசெப் அமைப்பின் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
குறைந்த ஊதியம் அளிப்பதாலும் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்காததாலும், எதிர்பார்க்கப்பட்ட லாபம் கிடைக்காததாலும் சாத்தியமற்ற தொழிலாக விவசாயம் மாறிக்கொண்டிருக்கிறது.
இதனால் மக்கள் விவசாயத்தை கைவிடும் போக்கு தொடர்கிறது. விவசாயத்தை தொழிலாக கொண்ட 48 விழுக்காடு மக்கள் தங்களின் தொழிலை விட்டுவிட்டு மற்ற தொழிலுக்கு செல்ல விரும்புவதாக கிராமப்புற ஊடக நடைமேடை என்ற அமைப்பு எடுத்த கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.
மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை குறைந்துள்ளது. இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் சுதந்திரம் அடைந்தபோதும் இதே பிரச்னைதான் தொடர்ந்தது. அதன் தீவிரம் மாறுபட்டபோதிலும் பிரச்னைகள் தொடர்கின்றன. இந்த சூழ்நிலையில்தான், காந்தியின் கொள்கைகளான சோசியலிசம், தர்மம், சமத்துவம் ஆகியவை செல்வத்தை பகிர்ந்தளிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.
சரியான பாதையிலிருந்து பார்த்தால் காந்திய பொருளாதார கொள்கைகள் புரியும்.
2025ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற இந்திய அரசின் நோக்கத்தில், காந்திய பொருளாதார கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வளர்ச்சியை காட்டிலும், அதனை சரிசமமாக பகிர்ந்தளிப்பதுதான் முக்கியமாகும்.
விவசாயத்தையும், கிராமப்புற தொழிற்சாலைகளையும் மையப்புள்ளியாக வைத்தால் தற்போது நிலவும் கிராமப்புற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். அதற்காக பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைகளை மூடிவிடக்கூடாது. பல காலமாக புறக்கணிக்கப்பட்ட கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இதன் பொருளாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருக அதன் பிரச்னைகளும் பெருகும். வேலைவாய்ப்பின்மை, வளர்ச்சி ஆகிய பிரச்னைகள் தீர்க்கப்பட்டபோதிலும் சமத்துவமின்மை தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்பதே வறுமையையும், சமத்துவமின்மையையும் குறைக்கும்.
காந்திய கொள்கைகளான தன்னிறைவு, தற்சார்பு பொருளாதாரத்திற்கு இந்திய அரசு முக்கியத்துவம் தந்து காதி, குடிசை தொழில் ஆகியவற்றை ஊக்குவித்துவருகிறது. இந்திய பிரச்னைகளை முதலாளித்துவ கொள்கைகள் தீர்க்காததால், மீண்டும் காந்தி கொள்கைகள் பொதுவெளியில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது.
காந்திய கொள்கைகள் திடமானவை, கடினமானவை என்பதில் சந்தேகமில்லை. நடைமுறையில் அதனை அமல்படுத்துவது கடினமானபோதிலும், இந்திய பொருளாதாரத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மீட்டெடுப்பதில் காந்திய கொள்கைகளே கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இதனால்தான், நூற்றாண்டு கடந்த பின்பும், காந்தி அனைவராலும் நினைவுக்கூரப்படுகிறார்.