இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உருவாக்க முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர் காந்தி. இந்தியாவின் இறையாண்மையை முன்னிறுத்திய அவர், நாடாளுமன்ற ஜனநாயகம் குற்றமற்றதாக செயல்பட வேண்டும் என விரும்பினார்.
காந்தி இறந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் தற்போது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் நிகழ்ந்துள்ள மாற்றம் அவர் விரும்பத்தகுந்த முறையில் அமைந்துள்ளதா என்பதை நோக்க வேண்டும்.
75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா விரைவில் கொண்டாட உள்ள நிலையில் நாட்டின் இந்தியா குடியரசின் செயல்பாடும் இறையாண்மையும் உயிர்ப்புத்தன்மையுடன் உள்ளதா என்பதை நாம் சுயபரிசோதனை செய்துபார்க்க வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற ஜனநாயகமே மற்ற அரசு முறைகளை விட மேம்பட்ட முறை என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட கூற்றாகும். ஆதிக்க சக்திகள் வன்முறையின் மூலம் வளர்ச்சியடைந்து அதிகார வெறியுடன் செயல்படாமல் இருக்க ஜனநாயக முறையே தலைசிறந்த அரணாக விளங்குகிறது. பொருளாதார முன்னேற்றம், சமூக நீதி, சமத்துவம் போன்ற அடிப்படை அம்சங்கள் ஜனநாயக அரசின் மைய நோக்கமாக விளங்குகிறது.
அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஜனநாயகம் வலுவாகவே உள்ளது என்றாலும், நம்மிடம் உள்ள சில சிக்கல்களை களைவதில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாற்றங்களும் அரசின் மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும் என விரும்பியவர் காந்தி. மக்களே மாற்றத்திற்கான சக்தி என்றும், அரசை மட்டுமே சார்ந்திருக்காமல் மக்கள் தங்களின் அடிப்படை பலத்தை உணர வேண்டும் என விரும்பினார். அதுவே ஜனநாயகத்தின் ஆணிவேர் என நம்பினார். அமைப்பை விட மக்களின் உரிமைதான் முதன்மையானது என்று கூறியவர் காந்தி. அந்த மக்கள் ஒன்றிணைந்து அநீதி, ஊழல், சமமற்ற தன்மைகளுக்கு எதிராகச் செயல்பட்டு தீமைகளை வீழ்த்த வேண்டும் என்றார்.
இதன் காரணமாகவே அரசிடம் அதிகாரக்குவியல் ஏற்படுவதை காந்தி விரும்பவில்லை. அரசு, ஜனநாயகத்தின் பாதுகாப்பு கருவியாக இருக்க வேண்டுமே தவிர மக்களிடம் ஆதிக்கம் செலுத்தும் கருவியாக மாறிவிடக் கூடாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்தார் காந்தி. கிராம அமைப்புகளைப் பலப்படுத்த விரும்பிய காந்தி, அதுசார்ந்த தற்சார்பு வாழ்வியலை வலியுறுத்தினார். கிராமங்களில் உள்ள மூட பழக்கங்கள், வறுமை, கல்லாமை போன்ற குறைகளைப் போக்க வேண்டும் என்றார். இவை அனைத்தும் மக்கள் இயக்கத்தின் மூலம் சாத்தியப்படுத்தவிரும்பிய காந்தி அரசின் அதிகார வலிமையைப் பரவலாக்கவே நினைத்தார்.
ஜனநாயக அமைப்புகள் என்பது அரசியல் லாபத்திற்கான அமைப்புகளாக இல்லாமல் மக்கள் சேவைக்கான கருவியாக இறுதிவரை செயல்பட வேண்டும் என்பதே காந்தியின் குறிக்கோளாக இருந்தது.