புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக கரோனா நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இன்று(ஆக.25) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "புதுச்சேரியில் இன்று(ஆக.25) முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரான எனக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை.
மேலும் வரும் 31ஆம் தேதி வரை இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும். மற்ற அனைத்து நாட்களிலும் வழக்கம் போல் கடைகள் செயல்படும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர். திருமண நிகழ்ச்சிகளில் அதிகளவு பேர் கலந்து கொள்கின்றனர். அதிகளவு நிகழ்ச்சிகளில் தகுந்த இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருப்பதால், கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது.
கரோனா நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாகத் தெரிவியுங்கள். கரோனா நோயாளிகளை விரைந்து அழைத்துச் செல்ல அதிகளவு ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.