ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ளது புகழ்பெற்ற தால் ஏரி. காஷ்மீரின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான இது, ’சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்’ என அழைக்கப்படுகிறது. இந்த ஏரியைக் காண ஆண்டுதோறும் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகின்றனர். குளிர் காலத்தில் உறைந்து காணப்படும் இந்த ஏரி 'காஷ்மீரின் வைரக்கல்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு போதுமான பனிப்பொழிவு இல்லாத நிலையில், தால் ஏரியை தற்போது வீசும் குளிர் காற்று உறைய வைத்துள்ளது. இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய உள்ளூர்வாசிகள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இது போன்று தால் ஏரி காட்சியளிப்பதாகத் தெரிவித்தனர்.
“முன்னொரு காலத்தில் ஏரி உறைந்தபோது நான் இளைமைப்பருவத்தில் இருந்தேன். இந்த ஆண்டு அதே நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். நகரத்தில் அதிக பனிப்பொழிவு இல்லை, மாறாக குளிர் மிகுந்ததாக இருக்கிறது. விரைவில் பனிப்பொழிவு ஏற்படும் எனக் காத்திருக்கிறோம்”என்கிறார் உள்ளூர்வாசி ஒருவர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி சன்னதிக்கு வந்த ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர், உறைந்த ஏரியைக் காணும் ஆர்வத்தில் தால் ஏரிக்கு வருகை புரிந்துள்ளார். அவர், ”இந்த ஏரி மறக்கமுடியாத அனுபவத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இங்கே கடும் குளிர் நிலவுகிறது. எங்களது பயணத்தில் மறக்கமுடியாத நினைவாக இது மாறியுள்ளது” என்றார்.
நேற்றைய நிலவரப்படி காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறைந்தபட்ச வெப்பநிலை -7 செல்சியதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 10 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:விரைவில் தால் ஏரியில் மிதக்கும் ஆம்புலன்ஸ்!