யமுனா நதியில் ஏற்பட்டு வரும் மாசுபாட்டுக்கு காரணமான இரண்டு தனியார் ஆலைகளுக்கு சீல் வைத்தும், 15 நிறுவனங்களை மூடியும் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பட்பர்கஞ்ச் தொழிற்பேட்டைப் பகுதியில் செயல்பட்டுவந்த ஆட்டோ மொபைல் நிறுவனம், லாரன்ஸ் சாலை தொழிற்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜீன்ஸ் பேண்ட்களுக்கு சாயமிடும் நிறுவனத்திற்கும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லியின் யமுனா நதியை ஒட்டிய களிண்டி கஞ்ச் பகுதியில், ஆற்றின் மேற்பரப்பில் நச்சு நுரை மிதந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களைப் பெற்றது. டிடர்ஜென்ட்கள்தான் இந்த ஆற்றில் ஏற்படும் மாசுபாடுகளுக்கு காரணம் என்று ஒரு புறம் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நாட்டின் பெரும்பாலான டிடர்ஜென்ட் நிறுவனங்கள் ஐஎஸ்ஓ தர சான்றிதழ்களைப் பெறுவதில்லை என்றும், டிடர்ஜென்ட்டில் பாஸ்பேட்டுகளின் செறிவு குறித்து மறைத்து இவை சந்தைகளுக்கு கொண்டு வரப்படுவதால்தான் இதுபோன்ற மாசுபாடுகள் அதிகரிப்பதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சாயமிடுதல் தொழிற்சாலைகள், தோபி காட்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீரில் அதிக அளவிலான பாஸ்பேட் உள்ளடக்கம் இருப்பதால்தான், இது போன்ற நச்சு நுரை உருவாவதாகவும் இந்த அலுவலர் தெரிவித்துள்ளார்.