அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அகமதாபாத் வந்தடைந்தார். அமெரிக்க அதிபரை வரவேற்க வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் செய்யப்பட்டிருக்க, மறுபுறம் லட்சக்கணக்கான மக்கள் அவரை வரவேற்க அகமதாபாத் குவிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், ட்ரம்ப்பிற்கு முன் ஆறு அமெரிக்க அதிபர்கள் இந்தியா வந்துள்ளனர்.
டுவைட் டி. ஐசனாவர் - டிசம்பர் 9-14, 1959
![list of us presidents visited india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6179170_d.jpg)
அமெரிக்காவின் 34ஆவது அதிபர் டுவைட் டி. ஐசனாவர் என்பவர்தான் இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், டெல்லி வந்த இவருக்கு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தையும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் ஐசனாவர் சந்தித்துப் பேசினார்.
மேலும், அப்போது டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் ஜசனாவர் கலந்துகொண்டு பேசினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இவர் உரையாற்றினார். யுனெஸ்கோவின் உலகின் பாரம்பரியம் மிக்க இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாஜ் மஹாலை ஐசனாவர் நேருவுடன் சுற்றிப் பார்த்தார்.
ரிச்சர்ட் நிக்சன் - ஜூலை 31- ஆகஸ்ட் 1, 1969
![list of us presidents visited india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6179170_r.jpg)
ஐசனாவரின் வருகையைப் போல அமெரிக்காவின் 37ஆவது அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வருகை அவ்வளவு உற்சாகமானதாக இருக்கவில்லை. இந்தப் பயணத்தின்போது அவர் ஒரு நாளுக்கும் குறைவாகவே இந்தியாவில் இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான உறவு சுமுகமாக இருந்ததில்லை. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசப் போரில், அமெரிக்க முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி கார்ட்டர் ஜனவரி 1-3, 1978
![list of us presidents visited india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6179170_j.jpg)
அமெரிக்காவின் 39ஆவது அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்தபோது, அவசர நிலையிலிருந்து நாடு மெல்ல மீண்டு கொண்டிருந்தது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி ஆட்சிப் பீடத்தை மொரார்ஜி தேசாயிடம் இழந்து சில மாதங்களிலேயே கார்ட்டரின் வருகை அமைந்திருந்தது. கார்ட்டரின் மூன்று நாள் பயணத்தில் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மேலும், டெல்லி அருகிலுள்ள ஒரு கிராமத்தை சுற்றிப் பார்த்தார். இந்தப் பயணத்திற்குப் பின், அக்கிராமத்திற்கு கார்ட்டரின் பெயர் சூட்டப்பட்டது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசப் போர், 1974ஆம் ஆண்டு இந்திய அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றால் மோசமடைந்திருந்த இந்திய - அமெரிக்க உறவை சரி செய்ய இது உதவியது.
பில் கிளின்டன், மார்ச் 19 -25, 2000
![list of us presidents visited india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6181888_fd.jpg)
அதன் பின் சுமார் இரு தலைமுறைகளாக எந்தவொரு அமெரிக்க அதிபரும் இந்தியா வரவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவின் 42ஆவது அதிபர் பில் கிளின்டன் 2000ஆம் ஆவது ஆண்டு இந்தியா வந்தார். இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சர்வதேச அளவிலும் கிளின்டனின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்டிருந்த அணு ஆயுத சோதனை, கார்கில் போர் ஆகியவற்றால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்திருந்த சமயம் அது. கிளின்டனின் வருகை இரு நாடுகளுக்குமிடையே நிலவி வந்த கசப்பைப் போக்கியது.
தனது ஆறு நாள் பயணத்தின்போது கிளின்டன் ஆக்ரா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பில் கிளின்டன், நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபரின் வருகையும் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளும்!
ஜார்ஜ் புஷ் - மார்ச் 1 -3, 2006
![list of us presidents visited india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6179170_bush.jpg)
அமெரிக்காவின் 43ஆவது அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி லாரா புஷ்ஷுடன் 2006ஆம் ஆண்டு இந்தியா வந்தார். மன்மோகன் சிங்கின் முதல் ஆட்சி காலத்தில் அமைந்த இந்தப் பயணம் இந்தியாவுக்கு மிக முக்கியமானது. இந்தியாவுடனான மிக முக்கிய அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது அப்போதுதான். மேலும் புஷ், டெல்லியின் புராண கிலாவில் உரை நிகழ்த்தினார்.
பராக் ஒபாமா - நவம்பர் 6-9, 2010
இந்தியா - அமெரிக்கா உறவு குறித்து சர்வதேச அளவில் செய்தி அனுப்பும் விதமாக அமைந்தது அமரிக்காவின் 44ஆவது அதிபர் ஒபாமாவின் பயணம். முந்தைய காலங்களைப் போல இல்லாமல், ஒபாமா நேரடியாக மும்பை வந்திறங்கினார். ஒபாமாவின் இந்தப் பயணம் வெறும் வர்த்தகத்துடன் நிற்கவில்லை. அதையும் தாண்டி 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்தது.
![list of us presidents visited india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6179170_obama1.jpg)
இப்பயணத்தின்போது, சர்வதேச பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு ஒபாமா ஆதரவளித்தார். ஒபாமாவின் மனைவியும் அப்போதைய அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மிச்செல் ஒபாமாவும் அப்போது இந்தியா வந்திருந்தார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடனமாடினார்.
மேலும், ஒபாமாவுடன் ஒரு பெரிய வணிகக் குழுவினரும் இந்தியா வந்தனர். மும்பையில் நடைபெற்ற அமெரிக்கா - இந்தியா வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார்.
பராக் ஒபாமா - 24-27,2015
2015ஆம் ஆண்டு பராக் ஒபாமா தனது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தார். இதன் மூலம் அதிபர் பதிவியிலிருக்கும்போது, இரண்டு முறை இந்தியா வந்த முதல் அதிபர் என்ற சிறப்பையும் ஒபாமா பெற்றார். இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற சிறப்பையும் பெற்றார்.
![list of us presidents visited india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6179170_obama2.jpg)
அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேச்சுவார்த்தையிலும் ஒபாமா ஈடுபட்டார். ஒபாமாவின் இந்தப் பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: ட்ரம்பின் இந்திய வருகையும் பாதுகாப்பு ஒப்பந்தமும்!