தென்நாட்டின் முன்னணி தினசரியான ஈநாடு நாளிதழ் செய்தியாளர் வசுந்தராவுக்கு, ஆந்திர உயர் நீதிமன்ற புதிய நீதிபதி லலிதா அளித்த சுருக்கமான உரையாடலைக் காணலாம்.
'எனது குழந்தைப் பருவத்தில், எப்போதும் ஒரு வெள்ளை கோட் அணிய வேண்டும் என்று கனவு கண்டேன். அதே காரணத்திற்காக, நான் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்தேன். ஆனால், விதி எனக்கு கறுப்பு கோட்டை பரிசளித்தது. வழக்கறிஞரான நான் வாழ்க்கையைத் தொடங்கிய போது, நீதிபதியாக வருவேன் என்று நினைத்ததில்லை.
கடின உழைப்பும், விடாமுயற்சியாலும் தான், எனக்கு இது கிடைத்தது என்று நான் நம்புகிறேன். விஜய் என்பவரை மணந்தேன். என் கணவர் ஒரு இயந்திர பொறியியலாளர். சில ஆண்டுகளில், நான் ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுத்ததால், நாங்கள் நான்கு பேர் கொண்ட குடும்பமாக மாறினோம். அந்த நாள்களில், நான் தொழில் மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டியிருந்தது.
எம்.ஆர்.கே.சவுத்ரி, கே.ஹரிநாத் மற்றும் ஓ. மனோகர் ரெட்டி ஆகியோருடன் பணிபுரிவது ஒரு வழக்கறிஞராக, எனக்கு மகத்தான அனுபவத்தைப் பெற உதவியது. குழந்தைகள் வளர ஆரம்பித்ததும், நான் எனது வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தினேன்.
கடினமான காலங்களில், என் அம்மா என்னை ஆதரித்த விதத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. நான் 2008ஆம் ஆண்டில் தனியாகப் பயிற்சியைத் தொடங்கினேன். நான் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்தேன். நான் எல்லா வகையான வழக்குகளையும் படிப்பேன். ஒரு வழக்கை வெல்வதை விட, வாடிக்கையாளரின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி தான் என்னை உயர்த்தியது. வெற்றியாளர்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் என்னை பின்னுக்கு இழுக்க முயற்சித்தார்கள். இதுபோன்ற பல நிகழ்வுகளை நான் எதிர்கொண்டேன். ஆனால், ஒவ்வொரு சவாலையும் நான் நம்பிக்கையுடன் சமாளித்துள்ளேன்.
ஆண் ஆதிக்கம் இல்லாத துறை இல்லை. பெண்கள் எதையும் சாதிக்க வல்லவர்கள். பொறுமையும் உறுதியும் நமது முதன்மை பலம். குடும்பத்தின் சரியான ஆதரவுடன், நாம் பல உயரங்களை எட்ட முடியும். சட்டத் தொழிலில் சிறந்து விளங்க, ஒருவர் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு புதிய சட்டத்தையும் திருத்தத்தையும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
நாங்கள் பக்கச்சார்பற்றவர்களாக இல்லாவிட்டால், எங்களால் நீதி வழங்க முடியாது. நான் இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகளில் வாதாடியுள்ளேன். இப்போது ஒரு நீதிபதியாகி விட்டேன். இது போன்ற ஒரு அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். என் பெற்றோர் என்னைப் பற்றி பெருமைப்படுகிறார்கள்.
என் கணவரும் குழந்தைகளும் இந்த தருணத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள். எனது மகன் கௌதம், ஜெர்மனியின் ஜேக்கப்ஸ் பல்கலைக்கழகத்தில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பட்டம் பெற்றார். மகள் மனசா, டெல்லியில் சட்டம் படித்து வருகிறார். எனது குடும்பத்தின் தொடர்ச்சியான ஆதரவின் காரணமாக மட்டுமே, என்னால் இந்த நிலையை அடைய முடிந்தது.
நான் ஆந்திர மாநில வேளாண் சந்தைக் குழுக்களுக்கான நிலையான ஆலோசகராகப் பணியாற்றியுள்ளேன். அவர்கள் சார்பாக வழக்குகளில் வாதாடியுள்ளேன். 2011ஆம் ஆண்டில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிலையான ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வாதாடினேன்.
திருமலையில் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபத்துக்கு எதிரான வழக்கிலும் நான் வாதிட்டேன். பாதுகாப்புக் காரணத்தைச் சுட்டிக்காட்டி மண்டபத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்று வாதாடினேன். எனது வாதம் வென்றது. இந்த வழக்குகளில் நான் பணம் பெறவில்லை. நான் எனது வாழ்க்கையில் பல தோல்விகளை பெறவில்லை. ஒரு வழக்கின் நீதியை ஆராய்ந்த பின்னரே, அந்த வழக்கை எடுத்துக்கொள்கிறேன். இது எனது தொழில் இரகசியம்.
எனது தந்தை ரவீந்திரநாத் தாகூரின் தீவிர ரசிகர். தாகூரின் நாவல்களில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் லலிதா. நான் பிறந்த காலத்திலேயே என் தந்தை அந்த நாவலைப் படித்து, எனக்கு லலிதா என்று பெயரிட்டார். நான் ஒரு டாக்டராக விரும்பினாலும், என்னால் முடிந்தவரை மக்களுக்கு நீதி கிடைக்க நான் சட்டத்தை எடுக்க வேண்டும் என்று என் தந்தை வலியுறுத்தினார். எனவே, நான் சட்டத்தை எடுத்துக் கொண்டேன், நான் அதைப் பெரிதாக மாற்றினேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.'
இவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதி லலிதா கூறினார்.
இளமை வாழ்க்கை
ஆந்திர உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் லலிதா, குண்டூர் மாவட்டம், பாபட்லா அருகிலுள்ள ஜம்முலபாலம் என்ற பகுதியில் பிறந்தவர். இவரது பெற்றோர் கொம்மினேனி அங்கம்மா சவுத்ரி - அமரேஸ்வரி. தந்தை சவுத்ரி, பி.ஏ. ஆங்கில இலக்கிய பட்டதாரி. லலிதாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தது. நீதிபதி லலிதா, பதலா ராம ரெட்டி சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். 1994ஆம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.