பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த மன்னராட்சியை மக்கள் புரட்சி மூலம் 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் முடிவுக்குக் கொண்டு வந்து அங்கு மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரான்சு நாட்டில் மக்களாட்சி நிறுவப்பட்டு 230 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளன.
இதை நினைவுகூரும் விதமாகப் புதுச்சேரியில் உள்ள பிரஞ்சு போர் நினைவிடத்தில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் தூதர் கேத்ரின், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியின்போது இரு நாட்டுத் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, இருநாட்டுத் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரஞ்சு குடியுரிமை பெற்றோர், அரசு அதிகாரிகள் உட்படப் பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து, முதியோர், ஏழைகளுக்குச் சமையல் பாத்திரங்கள், இனிப்புகள், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.