ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பா விமான நிலையத்தின் அருகே செம்மரங்களை ஏற்றி வந்த ஸ்கார்ப்பியோ கார் மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது ஸ்கார்ப்பியோ கார் மோதியது.
இந்த விபத்தில் செம்மரங்களை ஏற்றி வந்த ஸ்கார்ப்பியோ கார் தீப்பற்றி எரிந்தது. அந்தக் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு காரில் பயணித்த 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டு கார்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. செம்மரங்களோடு கடப்பாவிலிருந்து தாதிபத்ரி செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஸ்கார்பியோ காரில் பயணித்தவர்கள் முழுவதுமாக எரிந்ததால், அவர்களை அடையாளம் காணமுடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:உடுமலைப்பேட்டை விபத்தில் மூன்று பேர் பலி!