கர்நாடக மாநிலம், பெலகாவி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்கண்ணாவரா. இவருக்கு பாகவவா (6), தயம்மா (5), மலப்பா (4), ராஜஸ்ரீ (2) என நான்கு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் ஒதுக்குப்புறமான பண்ணை வீட்டில் கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகத் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இந்தக் குழந்தைகள் தங்களின் பெற்றோரான கிரெப்பா ஜக்கண்ணாவரா மற்றும் ராஜஸ்ரீ ஜக்கன்னவாராவை பின்தொடர்ந்துச் சென்றனர்.
அப்போது ஒரு குழந்தையின் கையிலிருந்த செல்போன் தவறி ஆழமான குழியொன்றுக்குள் விழுந்தது. இதையடுத்து அதை எடுக்கும் முயற்சியில் ஒன்றன் பின் ஒன்றாக குழந்தைகள் குழிக்குள் விழுந்து இறந்தன. இந்தக் குழி கிணற்றுக்கு நீரோட்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. அந்த நான்கு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவலறிந்த காவலர்கள் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 11 வயது சிறுமி உருளைக்கிழங்குத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, 6 அடி ஆழமான குழிக்குள் விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.