தனக்கென்று ஒரு தனிப்பிரிவுப் படை கோரிக்கையை தவிர்த்துவிட்டு போடோ கொரில்லா படையினர் சுமார் 1,500-2,000 பேர் இந்திய ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறையில் சேரவுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை, சுமார் 1,500-2,000 போடோ கிளர்ச்சிப்படை வீரர்கள் தங்களின் ஆயுதங்களோடு அஸ்ஸாம் அரசின் முன் சரணடைந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தாங்கள் வாழ விரும்புவதாகத் தெரிவித்த அவர்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் என்.டி.எஃப்.பி. (NDFB) என்ற பிரிவினைக் குழுவை களைக்கவுள்ளனர்.
பிரிவினை அமைப்பின் பொதுச்செயலாளர் கோபிந்தா பசுமதாரி நமது ஈடிவி பாரத்திடம் பேசியதாவது, 'போடோ அமைப்புக்கென தனி ஒரு பிரிவை இந்திய ராணுவத்தில் சேர்க்க வழிவகையில்லை என இந்திய அரசு தனது கொள்கை முடிவை எங்களிடம் தெரிவித்தது. தங்கள் இளைமைக் காலத்தை போராட்டத்திற்காக அர்ப்பணித்த போடோ இளைஞர்கள் இந்திய நிலப்பரப்பில் வேலைவாய்ப்பு, வணிகம் உள்ளிட்டவை மூலம் நல்வாழ்வு பெறும் காலமாக இதைக் கருதுகிறோம். எனவே இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவதற்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளோம்' என்றார்.
கடந்த திங்களன்று, மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு ஆகிவற்றுடன் பிரிவினைவாத போடோ அமைப்புகளான என்.பி.எஃப்.டி., எ.பி.எஸ்.யு., யு.பி.பி.ஒ. ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் கோபிந்தாவும் முக்கியப் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
போடோ மக்களைப் போலவே நாகா பிரிவினைவாத அமைப்பினரும் பின்னாளில் மனம் மாறி இந்திய ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப்படை, துணை ராணுவப்படை ஆகியவற்றில் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகின்றனர்.
1980ஆம் ஆண்டுகளில் அஸ்ஸாமில் நிலவிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி, உளவுத் துறை அமைப்புகளால் உருவாக்கப்பட்ட இந்த போடோ இயக்கம், வன்முறையைக் கைவிட்டு அரசுடன் இணைவது ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு. மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்த முக்கிய அம்சங்களும் உள்ளன.
உடற்தகுதி பெற்ற வீரர்கள் பலர் விரைவில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ராணுவம், துணை ராணுவப் படைகளில் தகுந்த பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும், இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் கோபிந்தா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்து உடற்தகுதியற்ற போராளிகளுக்கு, தொழில்முனைவோருக்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, தற்சார்பு வாழ்விற்கான பயிற்சிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் பிரிக்கப்பட்டு தனி போடோ மாநிலம் அமைத்துத் தர வேண்டும் என இளைஞர்களும், சில அமைப்புகளும் முன்வைத்துவரும் நீண்டநாள் கோரிக்கை தற்போது தேவையற்ற ஒன்று எனவும் கோபிந்தா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் திருப்தியளிப்பதாக உள்ளது. தனி மாநில கோரிக்கைகளில் முன்வைக்கப்பட்ட அம்சங்கள் புதிய ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டுள்ளன. எங்களின் அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி, எளிமையான குடிமகனாக எங்கள் பகுதியின் வளர்ச்சி, அமைதிக்காக செயலாற்றுவோம் என என்.பி.எஃப்.டி. அமைப்பின் பொதுச்செயலாளர் கோபிந்தா பசுமதாரி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு