கரோனா தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவுக்குள் வெளிநாட்டினர் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பத்திரிகையாளர் விசா வைத்திருக்கும் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுக்கு பயணம் செய்ய விரும்பும் பல வகை வெளிநாட்டினருக்கு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த வேண்டியதன் அவசியத்தை பரிசீலித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினர் குழுவுக்கு மேலதிகமாக, பத்திரிகையாளர் (ஜே-1) விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கும், ஜே-1 எக்ஸ் விசாக்களை வைத்திருக்கும் நபர்களுக்கும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் வைத்திருக்கும் J-1 அல்லது J-1 எக்ஸ் விசாக்களுக்கு தற்காலிமாக தடை விதிக்கப்பட்டு இருந்தால், அத்தகைய விசாக்கள் இந்தியாவில் நுழைவதற்கு வசதியாக உடனடியாக மாற்றித் தரப்படும். மேலும், பத்திரிகையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் தனிமைப்படுத்தல், மற்ற அனைத்து சுகாதார நடவடிக்கைகள் என COVID-19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்படி பின்பற்றப்படும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.