ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு குடோனில் 132 அட்டை பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, குற்றவாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து, சிகரெட் பெட்டிகள் அனைத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணை
முதல் கட்ட விசாரணையில், ஹரியானாவைச் சேர்ந்த ஹரி, ஷியாம் என்பதும் ஆந்திரா முழுவதும் வெளிநாட்டு சிகரெட்டை விற்பனை செய்ய டெல்லியிலிருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்தக் கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன், பைக், மது, சிகரெட் திருடர்கள் கைது!