கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று முதல் ஊரடங்கு உத்தரவிலிருந்து சில நிறுவனங்களுக்கும், தொழில்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூத்த அலுவலர்களுடனும், பல்வேறு துறை செயலாளர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ''சில தொழில்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஊரடங்கு உத்தரவிலிருந்து சில விலக்குகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மத்திய அரசின் வழிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
கிராமப்புற விளிம்புநிலை மக்களின் பொருளாதார பிரச்னையைக் கருத்தில்கொண்டே விவசாயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்களும், துணை காவல் கண்காணிப்பாளர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான பயண வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மாநிலங்களை விட்டு தொழிலாளர்கள் வெளியேறாதவாறு கண்காணிப்பு செய்யவேண்டும்'' என ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ''ஆன் லைன் வணிக நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்தந்த அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 16 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா, தீவிரக் கண்காணிப்பு வளையத்தில் ஹாட் ஸ்பாட்