ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத அளவாக 23.9 விழுக்காடு குறைந்தது. இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்துவரும் காங்கிரஸ், மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "பண மதிப்பிழக்க நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை அமல்படுத்தியதன் மூலம் நாட்டில் பொருளாதார அராஜகத்தை பாஜக மேற்கொண்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 24 விழுக்காடு குறைந்துள்ளது. இப்படியிருக்க, நிர்மலா சீதாராமன் ஏன் நிதியமைச்சராகத் தொடர வேண்டும்? அவரே பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். பொருளாதாரம் சீரழிந்துள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன.
பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவை மோடியால் காப்பாற்ற முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளில், மோசடியில் ஈடுபட்டதன் மூலம் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஆந்திராவின் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி : மனுதாரர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்