பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். திங்கள்கிழமை வரை (ஜூலை 27) வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில், வெள்ள நீரானது சமஸ்திபூர் என்ற மாவட்டத்திற்குள் புகுந்ததன் மூலம் அதன் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
பிகார் மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில், நேற்று (ஜூலை 28) மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 29.62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வெள்ள பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக தர்பங்கா உள்ளது. அம்மாவட்டத்தில் மட்டும் 11.74 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 தொகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கு சம்பரன், முசாபர்பூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 7 லட்சம், 3.2 லட்சமாக உள்ளது.
16 தேசியப் பேரிடர் மேலாண்மை குழுவும், 9 பிகார் மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. வெள்ள பாதிப்பு பகுதியில் சிக்கியிருந்த 2.62 லட்சம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 26 வெள்ள மீட்பு முகாம்களில் 22 ஆயிரத்து 997 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102ஆக உயர்வு!